இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 13.21 சதவீதம் அதிகரித்து, ரூ.13.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மத்திய அரசின் முழு ஆண்டு பட்ஜெட் இலக்கான ரூ.26.97 லட்சம் கோடியில் சுமார் 50 சதவீதமாகும்.
ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 14 வரை நிகர நிறுவன வரி வசூல் 20.58 சதவீதம் உயர்ந்து, ரூ.5.99 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நிறுவனங்கள் அல்லாத வரி வசூல் 5.83 சதவீதம் அதிகரித்து, ரூ.6.92 லட்சம் கோடியாக உள்ளது. மொத்த நேரடி வரி வசூல் 15 சதவீதம் உயர்ந்து, ரூ.16.03 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது.
பத்திரப் பரிவர்த்தனை வரி (STT) வசூல் சுமார் 52 சதவீதம் அதிகரித்து, ரூ.46,840 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட ஐ.டி. ரிட்டர்ன் தொகை (வரியைத் திரும்ப வழங்குதல்) 24 சதவீதம் அதிகரித்து, ரூ.2.65 லட்சம் கோடியாக உள்ளது.
2025-26-ம் நிதியாண்டில் ரூ.23.40 லட்சம் கோடி நேரடி வரியாக வசூலிக்கப்பட்டது. இதைவிட 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்க, நடப்பு நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவன வரி வசூலின் வளர்ச்சி, மேம்பட்ட வரி இணக்கம் மற்றும் பங்குச் சந்தை பரிவர்த்தனை வரி விகித உயர்வு ஆகியவை தற்போதைய வசூல் அதிகரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாக வரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதியாண்டின் முதல் ஆறரை மாதங்களிலேயே பட்ஜெட் இலக்கில் பாதியை அரசு எட்டியுள்ளதால், நடப்பு ஆண்டின் நேரடி வரி வசூல் இலக்கை அடைவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.